சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
மாண்புமிகு சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
மின்னஞ்சல் :minister_sw[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25673209
Tmt ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப.,
அரசு செயலாளர்
மின்னஞ்சல் : swsec@tn.gov.in
தொலைபேசி : 25671545(O)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம், குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம் புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அகில இந்திய அளவிலும், உலகின் அறிஞர் பெருமக்களிடையேயும், பெரும் மதிப்பையும் பாராட்டுதலையும் தமிழ் நாட்டிற்குப் பெற்றுத் தந்துள்ளார். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல் சமூக சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளைக் களைந்து சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து வந்துள்ளார். அரசின் நிதியை, தேவைக்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை வகுத்து வழங்கியுள்ளார். இவற்றின் மூலம் ஒரு நலமான வளமான மற்றும் நிலையான மனித ஆற்றல் மிக்க சமுதாயம் விரைவாக உருவாகி, வாழ்க்கையை சுமுகமாக வாழ இத்துறை வழிவகை செய்து வருகிறது.
குடும்பச் செலவைச் சரிக்கட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ள இக்காலகட்டத்தில் பெண்கள் தங்கள் கல்விஅறிவை வளர்த்து உயர்கல்வி பெற்று நல்ல வேலை தேடிக்கொள்ளும் வகையில் அரசு எண்ணில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தியும் நிதி உதவித் திட்டங்களை அமல்படுத்தியும் வருகின்றது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து சிறப்பு திட்டங்களும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூகத்தில் மதிப்புமிகு நிலைக்கு அவர்களை உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அரசின் முன்னணி திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம், சிறப்புமிகு சேவை செய்த பெண்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையில் அவ்வையார் விருது வழங்கும் திட்டம், 13 வகை கலவை சாதம் வழங்கும் சுவைமிகு சத்துணவுத் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கும் திட்டம், பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் பலமுனை நடவடிக்கைகள் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காத்து முன்னேற்றமடையச் செய்வனவாகும்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் சேவைகள், அதனுடைய அங்கங்களான சமூக நலம், சமூக பாதுகாப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய மூன்று இயக்குநரகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. மேலும், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வருவாய்த் துறை மூலம் செயல்படுத்திட இத்துறை ஒருங்கிணைப்பு முகமையாகவும் செயல்பட்டு வருகின்றது. சமூக நலத் துறை, பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாது திருநங்கையருக்கும் உதவிக்கரம் அளிக்கிறது. கவுரவமாக வாழ விரும்பும் மூத்தகுடிமக்கள், கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர், உழைக்கும் திறனற்ற முதிர் கன்னியர், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் போன்ற சமுதாயத்தில் நலிவுற்றோருக்கான ஓய்வூதிய நலத் திட்டங்களை வகுத்து வருவாய்த் துறை மூலம் இத்துறை செயல்படுத்தி வருகிறது.
சமூக நலத் துறை மூலமாக பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், குறைந்த வருமானம் ஈட்டும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பாதுகாப்பும் இருப்பிடமும் தேவைப்படும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம் மிகச்சிறப்பாக 17.05.2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்கென 4 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு வழங்கப்படும் நிதி 25,000 லிருந்து 50,000 ஆக உயர்த்தப்பட்டு திருமாங்கல்யம் செய்வதற்கென 4 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது சமுதாயத்தில் அனைத்து குழந்தைகளின் நலனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் போன்ற நலிவுற்றவர்களின் நலனை நாளும் உறுதி செய்திடும் வகையில் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வு ஊதியம் 500/- லிருந்து 1000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு 2 ஒன்றியங்கள் வீதம் 64 ஒன்றியங்களில் மூத்தகுடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்காக சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைத்து, ஆதரவற்ற சிறுவர்களுக்கும் மூத்தகுடிமக்களுக்கும் உணவும், பாதுகாப்பான உறைவிடமும் அளிக்கப்பட்டு வருகிறது. மூத்தகுடிமக்கள், பெற்றோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது நலனை காக்கும் வகையில் பல பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் இயற்றப்பட்டு இத்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நலச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் ஆகிய சட்டங்களுக்கான விதிகள் இயற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டங்கள் மோசமான குடும்ப சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மூத்தகுடிமக்களுக்கும் பெண்களுக்கும் மிகுந்த பாதுகாப்பு அளித்து வருகின்றன.
திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, அவர்கள் பயன்பெறும் வகையில் திருநங்கைகள் நல வாரியம் மூலமாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் அளித்தல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் திருநங்கைகள் இன்றைய சமுதாயத்தில் மதிப்புடன் மற்றவர்களை போல பாதுகாப்பான நிலையில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஒரு அங்கீகாரம் அளித்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தேசிய அளவில் தமிழ்நாடு அரசு சிறந்த மாநிலமாக உயர்ந்த நிலையினை அடைந்திடும் நோக்கத்துடன் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, குழந்தைகள், பெண்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பொருளாதார முன்னேற்றம், சமநிலை, சமூக உரிமைகள் மற்றும் சமூக நீதி பெற்று பயன்பெறும் வகையில் சிறப்பான சேவைகள் செய்து வருகின்றது.