Header

✔ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் தோற்றம், வருமானம், நோக்கம், நலன் பெறுபவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய பதிவுரு ஒன்றினைப் பேணி வருதல்.

✔பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது எந்தக் குறிக்கோள்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் கருதப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அவற்றுக்காகச் செலவிடப்படுவதை உறுதி செய்தல்.

✔பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிருவாகத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.

✔பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடையின் மேலாண்மைக்கான திட்டங்களைத் தீர்வு செய்தல். ஆனால், அத்தகைய திட்டம் எதுவும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவர்தம் தரப்பினைக் கேட்பதற்கு வாய்ப்பு ஒன்றினை வழங்காமல், அத்தகைய திட்டம் எதுவும் தீர்வு செய்யப்படுதல் கூடாது.

✔பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால் அனுப்பப்பட்ட வரவு செலவு திட்டங்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் ஏற்பளித்தல் மற்றும் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல்.

✔இந்தச் சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணங்கிய வகையில் பொறுப்பாட்சியர்களையும், நிருவாகிகளையும் நியமித்தலும் அவர்களை அகற்றுதலும்.

✔பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் தொலைந்துபோன சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

✔பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் சொத்து தொடர்பாக வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொகுத்தல் மற்றும் எதிர்வழக்காடுதல்.


அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

(1) வாரியம் அமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன ?

வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்த தயாள சிந்தனையும், பரோபகார மனமும் கொண்ட பல வள்ளல் பெருமக்கள், வன்னிய சமுதாய அடிதட்டு மக்களின் மேம்பாட்டிற்காக, அறக்கட்டளைகளை உருவாக்க தங்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை காணிக்கையாக வழங்கினர். அவர்கள் ஏழை மக்களின் நலனுக்காக பல கல்வி நிறுவனங்கள், அன்னதானச் சத்திரங்கள், இலவச திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகள் உருவாக்கினர். ஆனால் பல நேர்வுகளில் பல்வேறு அறச்செயல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட சொத்துக்கள், மேற்சொன்ன நோக்கங்களுக்காக பயன்படாமலும், நல்ல நிலையில் பேணி வரப்படாமலும் இருக்கின்றனர். அத்தகைய பொறுப்பாட்சிகளின் மற்றும் நிலைக்கொடைகளின் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், உயில் எழுதிய கொடையாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும், அரசால் தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம் 2018 (தமிழ்நாடு சட்டம் 44/2018) என்கிற புதிய சட்டம் இயற்றப்பட்டு, இச்சட்டத்தின்படி தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம் அமைக்கப்பட்டது.

(2) வாரியத்தில் அடங்கியிருப்பவர் எவரொவர்கள்?

இவ்வாரியம் கீழ்க்காணும் நபர்களை கொண்டிருத்தல் வேண்டும்
a) ஒரு தலைமையாளர், அவர் வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர் ஒருவராக இருத்தல் வேண்டும்.
b) பின்வரும் உறுப்பினர்கள், அவர்கள் வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
(i)உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இடையே இருந்து ஒரு நபர்;
(ii)அகில இந்திய பணிகளில் இருந்து ஒரு நபர்;
(iii)சட்ட மன்றப் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையே இருந்து இரண்டு நபர்கள்;
(iv)பொறுப்பாட்சிகளின் பொறுப்பாட்சியர்கள் மற்றும் நிலைக்கொடையின் நிருவாகிகள் ஆகியோருக்கிடையே இருந்து ஒரு நபர்;
(v)வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாய நிறுவனங்களைச் சார்பாற்றம் செய்கிற ஒரு நபர்;
(vi)சட்டத் தொழில், தணிக்கை, வணிகம், கல்வி, பொறியியல் மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளில் நல்ல பெயர் பெற்றுள்ள புகழ்வாய்ந்த நபர்கள் இருவர்;
(vii)வன்னியகுல க்ஷத்திரியர் நலத்திற்காகப் பணியாற்றி உள்ள இரண்டு பெண்கள்;
c) பின்வரும் பதவி வழி உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது;
(i) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசுச் செயலாளர்; மற்றும்
(ii)மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் ஆணையர் அல்லது இயக்குநர்:
ஆனால், பதவிவழி-உறுப்பினர்கள், வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பது தேவையில்லை.
d) உறுப்பினர் – செயலாளர்

(3) பொறுப்பாட்சி என்றால் என்ன?

“பொறுப்பாட்சி” என்றால், வன்னியகுல க்ஷத்திரியரைச் சேர்ந்த நபரொருவரால், அல்லது நபர்கள் அடங்கிய குழுவால், அல்லது நிறுவனங்களால் பொறுப்பாட்சியை உருவாக்குகிறவர் கருதிகிறவரான அறச்செயல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி எனப் பொருள்படும்.

(4) நிலைக்கொடை என்றால் என்ன?

நிலைக்கொடை என்றால், ஓய்வு இல்லங்கள், சத்திரங்கள், பாடசாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஏழைகளுக்கு உணவளிக்கும் இல்லங்கள், கல்வி மேம்பாட்டிற்கான நிறுவனங்கள், மருத்துவ உதவி, மக்கள் நல்வாழ்வு அல்லது அது போன்ற இயல்பினதான பிறநோக்கங்கள் போன்ற வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயம் அல்லது அதன் பிரிவு எதற்கும் பயன்படும் வகையிலான நோக்கங்களுக்கு ஆதரவு தருவதற்கு அல்லது அவற்றை பேணிவருவதற்கு வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயம் அல்லது அதன் பிரிவு எதனின் நலனுக்காக அல்லது அதனால் உரிமை என்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக் கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் எனப் பொருள்படும் மற்றும் அதில் தொடர்பான நிறுவனமும் உள்ளடங்கும்.

(5) வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

வாரியத் தலைவர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் அரசினால் குறித்துரைக்கப்படக் கூடிய மூன்றாண்டுக் கால அளவுக்கு மேற்படாத காலத்தில் பதவி வகிக்கலாம்.
நபரொருவர் வாரிய தலைவராகவோ அல்லது வாரிய உறுப்பினராகவோ அல்லது இரண்டிலுமோ இரண்டு கால அளவுகளில் இவ்வாரியத்தில் பணியாற்றலாம்.

(6) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றினை வாரியத்தில் பதிவு செய்ய பின்பற்றக்கூடிய செயல்முறைகள் என்ன?

a) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அடையாளத்திற்கு போதுமான விவரிப்பு
b) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்திலிருந்து வரும் ஆண்டு மொத்த வருமானம்
c) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்காக ஆண்டுதோறும் செலுத்தத்தக்க நிலவருவாய், தீர்வைகள், வீதங்கள், வரிகள் தொடர்பான தொகை
d) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்திலிருந்து வருமானத்தை பெறுவதற்கு ஆண்டுதோறும் செலவாகும் செலவுகளின் மதிப்பீடு ஒன்று.
e) பின்வருவனவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகை:-
 (i)பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அலுவலர்களுக்கும் பிற பணியாளர்களுக்குமான சம்பளம் மற்றும் பிற படித்தொகைகள்
   (ii)அறச்செயல் நோக்கங்களுக்காக
   (iii)பயனார்களுக்காக மற்றும்
   (iv)அத்தகைய பிற நோக்கங்களுக்காக
பொறுப்பாட்சி ஆவணத்தின் அல்லது உயிலின் படியுடன் அல்லது அவ்வாறான ஆவணம் எதுவும் எழுதிக் கொடுக்கப்படவில்லையென்றால் அல்லது அதன்படியொன்றைப் பெற இயலாத நிலையில், விண்ணப்பத்தாரருக்குத் தெரிந்த அளவிலான, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் தோற்றம், இயல்பு மற்றும் நோக்கம் குறித்ததான தகவல்களையும் அதன் பயனாளர்கள் குறித்த தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
வாரியத்தால் ஒழுங்குமுறை விதிகளின்படி வகுத்துரைக்கப்படக் கூடிய பிற தகவல்கள் எவையும். (பிரிவு – 30)

(7) வன்னியகுல க்ஷத்திரிய சமுதாயத்தைச் சார்ந்த தனிநபர் அல்லது குழுவினரால் உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையினை வாரியத்தில் பதியப்பட வேண்டும் என்பது கட்டாயமா?

ஆம் இந்தச் சட்டமானது தொடங்கியதற்கு முன்னரே உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நேர்வில், பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், அவ்வாறான தொடக்கத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக இவ்வாரியத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும். மற்றும் அவ்வாறான தொடக்கத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நேர்வில், அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக இவ்வாரியத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.

(8) இதுவரை கண்டறியப்பட்ட பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் எத்தனை?

இதுவரை 118 பொறுப்பாட்சிகள்/நிலைக்கொடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

(9) அசையா சொத்தின் உடைமைக்காக வழக்கு பதிவு செய்ய கால அளவு ஏதும் உள்ளதா?

சட்டப்பிரிவு 86-ன் கூற்றின்படி, 1963-ஆம் ஆண்டு கால வரம்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதிலும் அடங்கியுள்ள அசையாச் சொத்தின் உடைமைக்கான அல்லது அத்தகைய சொத்தில் உள்ள அக்கறை பெற்றிருத்தல் எதற்குமான உரிமை வழக்கு எதற்கும் பொருந்தாது.

(10) வாரியத்தின் அதிகாரங்கள் என்ன?

சட்டப்பிரிவு 27, வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை தெளிவாகப் பட்டியலிடுகிறது.
வாரியத்தின் அதிகாரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:
1.அனைத்துப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகளை பொதுவாக கண்காணிக்க அதிகாரம்
2.வாரியம், தனது கண்காணிப்பின் கீழ் உள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது, தக்கமுறையில் பேணிவரப்படுவதையும், கட்டுப்பாடு செய்யப்படுவதையும், நிருவகிக்கப்படுவதையும் மற்றும் அதிலிருந்து வரும் வருமானமானது அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உரிய முறையிலும், அத்தகைய பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை உருவாக்கப்பட்ட அல்லது கருதப்பட்ட நோக்கங்களுக்காகச் செலவிடப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த சட்டத்தின் படியான அதன் அதிகாரங்களைச் செலுத்துவது வாரியத்தின் கடமையாக இருத்தல் வேண்டும்.
3.பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது எந்த குறிக்கோள்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் கருதப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அவற்றுக்காகச் செலவிடப்படுவதை உறுதி செய்தல்.
4.பொறுப்பாட்சியின் மற்றும் நிலைக்கொடையின் மேலாண்மைக்கான திட்டங்களைத் தீர்வு செய்தல்.
5.பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால் அனுப்பப்பட்ட வரவு செலவு திட்டங்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் ஏற்பளித்தல் மற்றும் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல்.
6.வாரியச் சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணங்கிய வகையில் பொறுப்பாட்சியர்களையும், நிருவாகிகளையும் நியமித்தலும் அவர்களை அகற்றுதலும்.
7.பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் தொலைந்துபோன சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
8.பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் சொத்து தொடர்பாக வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளை தொகுத்தல் மற்றும் எதிர் வழக்காடுதல்.
9.வாரியச் சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணங்கிய வகையில், விற்பனை, பரிசு, அடமானம் பரிமாற்றம் அல்லது குத்தகை மூலமாக பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் அசையாச் சொத்தின் உரிமை மாற்றம் எதற்கும் ஒப்பளிப்பு வழங்குதல்.
10.பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களையும் அது தொடர்பான கணக்கு பதிவுருக்கள் அல்லது ஒப்பாவணங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல் அல்லது ஆய்வு செய்வதற்கு ஆவண செய்தல்.
11.பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மற்றும் அதன் சொத்துக்களின் இயல்பினையும், அளவையும் புலனாய்வு செய்து தீர்மானித்தல் மற்றும் அத்தகைய பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்தின் நிலஅளவை ஒன்றை தேவையான போதெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு செய்தல்.
12.பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வருமானத்தை, பொறுப்பாட்சியின் மற்றும் நிலைக்கொடையின் நோக்கத்திற்கு இணங்கிய வகையில் பயன்படுத்துவதற்கு பணித்தல்.
13.பொதுவாக பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் கட்டுப்பாடு, பேணிவருதல் மற்றும் நிருவாகத்திற்கு தேவைப்படக்கூடிய அத்தகைய அனைத்து செயற்பாடுகளையும் செய்தல்.

(11) பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியை அமர்த்துவதற்கான அதிகாரம் அரசால் எப்போது செலுத்தப்படும்?

வாரியச் சட்டப்பிரிவு 64-ன்படி, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் ஓர் ஒப்பாவணம் அல்லது ஆவணம் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் மேலாண்மைக்கான திட்டம் எதுவும், வாரியம் அல்லாத பிற அதிகார அமைப்பு அல்லது நீதிமன்றம், ஒரு பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அமர்த்தலாம் அல்லது அகற்றலாம் அல்லது மேலாண்மை திட்டத்தை நிலைப்படுத்தலாம் அல்லது மாற்றியமைக்கலாம் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் மீது கண்காணிப்பைப் பிறவாறு செலுத்தலாம் என்பதாக வகை செய்கிறவிடத்து, அந்தப் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் ஒப்பாவணத்தில், தீர்ப்பாணையில், ஆணையில் அல்லது திட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், மேற்சொன்ன அத்தகைய அதிகாரங்கள், அரசால் செலுத்தத்தக்கதாக இருக்கும்;
வரம்புரை: ஆனால், ஒரு வாரியம் அமைக்கப்படுகிறவிடத்து, அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துவதற்கு முன்பு, அரசு வாரியத்தைக் கலந்தாய்வு செய்தல்.

(12) ஆக்கிரமிப்பை அகற்ற வாரியம் எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா?

சென்னை, இராயப்பேட்டையில் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்குச் சொந்தமான 12.6 கிரவுண்ட் நிலம் சமூக விரோத சக்திகளால், 1996-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டு காலி செய்யப்படாமல் இருந்தது. முன்னர் இருந்த அறங்காவலர் குழுக்கள் பலமுறை முயன்றும் காலி செய்ய இயலவில்லை. இது தொடர்பாக நன்கு திட்டமிட்டு, சென்னை காவல்துறையின் ஒத்துழைப்போடு ரூபாய் 85 கோடி மதிப்பிலான இந்த இடம் மீட்கப்பட்டது. இதில் அலுவலகக் கட்டிடம் கட்டி, வாடகைக்கு விட்டால், ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ 2 கோடி வருமானம் அறக்கட்டளைக்கு கிடைக்கும்.

(13) வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளைகளால் நடத்தப்படும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை:

16 அரசு உதவிப் பெறும் பள்ளிகள்.

(14) வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அறக்கட்டளைகளால் நடத்தப்படும் சுயநிதிப் பள்ளிகளின் எண்ணிக்கை:-

4 சுயநிதிப் பள்ளிகள்

(15) வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அறக்கட்டளைகளால் நடத்தப்படும் சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை:

5 சுயநிதி கல்லூரிகள் மற்றும் 2 தொழிற்பயிற்சி நிறுவனங்கள்.


குறிப்பு:

மேலும் இப்பொருள் குறித்து விளக்கங்களைப் பெற தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் 44/2018)-த்தினை பார்க்கலாம்.